Thursday, 6 September 2012

கடவுள் துகள்கள்-1


கடவுள் துகள்கள்-1 
(KADAVUL THUGALGAL)

ஞானத்தை முதன்மையாக்கிக் கொண்டு தேடுதலையும் அதை அறிதலையுமே தின வாழ்கையாக்கிக் கொண்டு வந்தோமேயானால் அறிவுக்கண் திறந்து வழிவிடும்.  இதுவொரு வகையான ஏமாற்று வித்தை.
அதனுடே நம் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடும். கோமணம் சகிதம் நிற்க வேண்டியது தான். இன்னும் அனைத்தையும் துறந்தோமானால் நிர்வாணமாக நின்று சிஷ்ஷைகளுக்கு அருள் பாலிக்கலாம். குடும்பம் நம்மைவிட்டு போவதற்குரிய சுற்று சூழல் உருவாகிக் கொண்டேவரும் அல்லது நாம் விலகி நிற்க வேண்டியது வந்தே தீரும். இதையெல்லாம் கடந்து வருவதற்கே குருவும் அவருடைய வரையறைக்கப்பட்ட தவங்கள் உயிர்க்குள் விளையாடி பிறவியை அறுத்து ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுக்களை அவிழ்த்து வெறும் வெற்றிடமாக இருப்பு நிலைக்குச் சென்று விடும்.
தவ ஆற்றல் இருப்பு அடைவதற்குரிய வழியை கண்டு பிடித்து கொண்டவுடன். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவ்விடத்திற்கு போவதற்கு எத்தனிக்கும். சில சமயம் போய் வந்தவண்ணமிருக்கும். பல தடைகள் கடந்து அதை அடைந்த நிலையை உணர்ந்துவிட்டோமேயானால் அதற்கு அப்பால் சென்றடையவேண்டிய எல்லை மிக பிரமாண்டமாக இருக்கிறது என்பதனை மனம் மிக எளிதாக உணர்ந்துவிடும். குடும்ப வாழ்க்கையில் இதையடைய எடுக்கும் முயற்சிகளெல்லாம் ஆரம்ப நிலையிலேயே உதிர்ந்துவிடுகின்றன. இது ஒரு வகையான பேரியக்க ஆற்றல் ஏற்படுத்தும் மாபெரும் தடைகற்களே.
எல்லையில்லா உழைப்பால் கால சக்கரத்தையும் அதன் அமைப்பையும் அதன் குறுக்காக நடக்கும் கலையே யோகத்தின் ஆரம்பநிலை என்ன என்பதனை மனம் உணர்ந்துக்கொள்ளும். கால சக்கரம் அத்தனை சீக்கிரம் வழி விட்டு விடாது. மனத்தை ஏமாற்றி கனவுகளில் நம் பிரகஞ்சையோடு இருக்கின்ற காலத்தில் காலசக்கரத்தின் பாதையை திறந்து மாய பிம்பத்தை காட்டும். பல சமயங்களில் காலசக்கரத்தின் எல்லைக்குட்பட்ட குறுக்குப்பாதையில் பயணிக்க பயணிக்க மனம் விரிவடைந்துக் கொண்டேயிருக்கிறது. நம்முடைய கருமையத்திற்கும் பேரியக்க மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு இந்த கால சக்கரம் வழிவிடும் சமயங்களில் மட்டுமே உணர்ந்துக்கொள்ள முடிகிறது.
அதை இயக்கத்திற்குக் கொண்டு வரும் காலத்தில் மனம் பேரியக்க பிரபஞ்சத்தில் சில காந்த துகள்களை உரச வரும் போது அதன் பதிவும் நம் பிறவியின் தொடர்புகளும் கோர்வையாக கோற்க்கப்பட்டதுப் போல் மனதினுள் வெளிப்படுகின்றன. யோகநிலையின் உச்ச நிலையில் இவ்வகையான தொடர்புகள் மனதுக்கு கைகூடுகின்றன.
கால சக்கரத்திற்குள் அடைபடும் போது காட்சிகள் விரிந்து மனத்தின் தன்மைகளை பரிசோதிக்கின்றன. மனம் அதற்குள் அடைபடவே இத்தகையான காட்சிகளை நேரடியாக தோற்றுவிக்கப்படுகின்றன். வான்துகள்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் அதை வெட்டிவிட முடியாமல் கால சக்கரத்தின் பிடிக்குள் அடைபட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
நம் கருமையம் எப்பொழுதும் பேரியக்க மண்டலத்தின் துகள்களின் தொடர்போடேயேயிருக்கின்றன. அதன் அலைத்துகள்கள் எல்லாவற்றிலும் ஊடுருவியும்  தொடர்புக்கொண்டும் இருக்கின்றன. காட்சிகளை விரித்தக்காட்டுவதும் தேவதைகள் பேசுவதும் சித்தர்கள் உலாவுவதும் இந்த துகள் என்று சொல்லப்படுகின்ற பாதையையே அலையாம் என்கிற விண்துகள்களே.
பொது
உறக்கத்தில் பிரகஞ்சையோடு இருக்கின்ற காலங்களிலும் தவம் கைகூடும் காலத்திலும் முதிர்ச்சி நிலைகளிலும் இத்தகையான காட்சி எழுச்சிகள் தினம் ஒன்றாக வந்த வண்ணமிருக்கும். மகள் பிறந்த சமயத்தில் இத்தகையான பிரபஞ்சையில் என் இடது கை காயம் பட்டிருப்பதுப்போலவும் என்னால் அவளை கைகளில் இருத்திக்கொள்ள இயலாமல் எழும்பிய வலியை என் மனைவியிடம் சொல்லுவதுப் போலவும் பல மாதங்களுக்கு முன்னரே என்னால் மிக துல்லியமாய் உணர முடிந்தது. அதன் பிறகு மெதுவாய் என் கைகள் காயமின்றி காயப்பட்டு இன்று கைக்கட்டுடன் அதன் வலியை ஜீரணிக்க முடியாமல் மிக கஷ்டங்களுடன் குழந்தையை எடுக்க இயலாமல் வலியுடனிருக்கிறேன். இது அகம் விரிவடைந்து மனது காலசக்கரத்தின் எல்லையைத் தாண்டி துகள்களுக்குள் உள்ள நம்முடைய பாதையில் செல்லும்போது ஏற்படுகின்ற காட்சிகள் இவைகள். பேரறிவாக உள்ள நம் கருமையத்திற்கும் உடலின்றி செயல்படக்கூடிய அந்த எல்லையில்லா பிரகஞ்சையில் எல்லைக்குட்பட்ட இந்த கருமையம் தொடர்புக்கொள்கின்ற பொழுது ஏற்படுகின்ற உயர்தரிசன காட்சிகள்.
ஒரு முறை நிறைய பேரழகுப் பெண்கள் முழு நிர்வாணமாய் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரையும் நான் பார்க்கிறேன். பேரழகிகளை நான் நிர்வாணமாய் பார்க்கிறேன். உடம்பினுள் அந்த எழுச்சி ஆரம்பித்து கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கின்றன. இது உண்மையா என்று அறிய நான் மிக அருகில் சென்று அவர்களின் உடல்களைப் பார்க்கிறேன். மிக துல்லியமாய் உடல்கள் கண்களை கூச செய்கின்றன. ஆவல் பெருகி மிக நெருங்கி அவர்கள் உடல்களைப் பார்க்கிறேன். எல்லோருடைய அங்கங்களை மிக தெளிவாய் பார்க்கிறேன். ஒரு அழகியின் அருகில் சென்று மார்பின் மேல் கைகளை வைத்துப் பார்க்கிறேன். அந்த அங்கம் அதன் வெப்பம் அதன் ஸபரிசம் எல்லாம் என் கைகள் மார்பின் மேலிருக்கும் போது உணர்நதேன். பக்கத்தில் மிகப்பெரிய வெண்மையான தாடி மயிருடன் ரிஷி ஒருவர் வந்து என்னைப்போகுமாறு சொன்னார். நான் அங்கேயே நின்று மற்ற நிர்வாண அழகிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். யோகி அருகில் வந்து இது தேவதைகளின் உலகம் நீ இதை தாண்டி செல். இங்கிருந்தால் இதை கடக்க மாட்டாய். என்றார்.
நான் விழித்தெழுநதேன் என் கைகளுக்குள் அந்த மார்பின் ஸபரிஸம் பல ஆண்டுகளாய் இன்றும் இருந்து வந்தவண்ணமிருக்கிறது. அந்த காட்சிகளுக்குள் மனம் மிக எளிதாக பயணித்து வெளிவந்துவிடுகிறது. என் எல்லைக்குட்பட்ட பிரகஞ்சையால் நான் அதை காண நேர்ந்தது. பெரும் தவிப்பை அது மென்மேலும் உருவாக்கியது. பல சமயங்களில் அந்த நிகழ்ச்சியின் விடுபட்ட தொடர்புடன் பயணம் செய்திருக்கிறேன். கருமையப்பதிவுகள் காலத்தைக் கடந்து செல்லும்போது மனத்தின் தொடர்ப்புகளுக்கு ஏற்ப்ப உடலை கடத்தியாக கூட்டிச்சென்று இத்தகைய உலகங்களில் தொடர்ப்பை மனத்திற்குக் கொடுத்து சோதிக்கின்றன. அதை கடந்து வருபவனை மீண்டும் உறவுகளுக்கு இட்டுச் செல்லும்.  பேரழகிகளை நிர்வாண உயிர் காட்சிகளாக கண்டுடைய செய்து மனதை மயக்குமற செய்கின்றன. அதன்பின் பெரும் காட்சி பிழைகள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. பேரழகிகள் மறைந்து நாம் பழகி திரிந்த அறிந்த பெண்கள் காட்சிகளாக உருமாறும் போது தோன்றும் பெரும் அவஸ்தைகள் தவத்தை கைவிட்டு ஓடவே செய்யும். கடவுள் துகள்கள் நம் காலசக்கரத்தின் பாதையில் ஒத்திசையாக இயங்கிக்கொண்டுயிருக்கின்றன என்பதற்கு யோக நிலைகள் கண்களின் முன் கொண்டு வரும் காட்சி பிழைகளாகவும் உயர்தரிசன பேரியக்க மண்டலத்தின் சாட்சியாகவும் இருக்கின்றன.

Spiritual and Siththargal in English
http://kthillairaj.blogspot.in/2012/08/secrets-of-interpretations-behind-7th.html
          

Monday, 9 July 2012

சட வாயு என்கிற சடாரி


சட வாயு என்கிற  சடாரி
என்னுடைய ஆங்கில சித்தியிலில் ஓர் சில இடங்களில் இந்த சட வாயுவின் வெளிப்பாடுகளை விவரித்தவாறு சென்றிருக்கிறேன். சடவாயு தன் தன்மையாய் பரந்து விரிந்து எல்லைகளைத் தாண்டி மகாபிரபஞசத்தை தொட்டு ஓடும், இந்த மாபெரும்சக்தியின் ஓட்டத்தை வார்த்தைகளுக்குள் அடக்கிக் கொண்டுவருவது மிக சிரமமே. சடவாயு என்பது மனித உடலில் நிரந்தரமாய் இழையோடி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாய் செயல்பட்டுக் கொண்டிருந்து வரும் ஒரு பேராற்றல். 
மனித உடல் மகா பிரபஞ்சத்திலிருந்து சக்தியை உறிஞ்சியெடுத்து தவசக்தியாய் அதை அவரவர் தவநிலையின் இயல்புகளுக்கேற்ப்ப உள்ளுக்குள் பரப்பிவைத்திருக்கக்கூடிய பெரும் பெட்டகமது. தாயின் உடல் விட்டு ஜனிக்கின்ற காலத்தில் இந்த சடவாயு தாயின் சடவாயவால் குழந்தையை வெளியேற்றுகிறது என்பது சூட்சுமமாய் வேதரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள். மிக சூட்சுமமாய் கிளர்ந்து எழும்பும் இத்தகைய நறுமணம் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமாய் விவரிக்கமுடியாத ரகசியமாக உள்ள நறுமணமாய் அமைகிறது. ஒன்றுக்கொன்று வேறுப்பட்டுயிருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடனே இயங்கிக் கொண்டிருக்கிறது.
சில சமயங்களில் சடவாயு உடல் தவசக்தியினாலும் பிரபஞ்ச சக்தியின் தொடர்புகளினாலும் உடலைவிட்டு அணுக்கள் கூட்டுக்களில் பரவி வெளியேறுகிறது. சில தவசிகளின் புறத்தில அழுக்காய் தோன்றினாலும் அவர்தம் அறுகாமையில் நாம் செல்லும் நேரத்தில் சட்டென்று நறுமண வீசும் துகள்கள் வெளிப்பட்டு நம் புலன்களுக்கு எட்டி விடக் கூடிய நிலையில் எழும்பி பரப்பிவிடும். அவையாவும் இந்த உடல் கூட்டுக்களில் இருந்து கிளம்பியதிலிருந்து உருவானவையே. பல சமயங்களில் பல உண்மையான தவசிகளின் அறுகாமையில் நான் உணர்ந்த இத்தகைய நுகர்வுகள் வாசகர்கள் இனி உணர்ந்துக் கொள்ளலாம்.
ஒவ்வொறு மனித அக உடலிலும் இத்தகய நறுமண வீசும் கதிர்கள் புற புலன்களுக்கு எட்டாதவையாகயிருந்து வருகின்றன. உள்ளொளி பூத்து குலுங்க ஆரம்பித்தவுடன் அகத்திலிருந்து வெளிக்கிளம்பகின்றன. பல வகையான உயர்சத்துமிக்க கதிர்கள் தவசீலர்களின் ஒளியை புறத்திலிருந்து வெளிப்படுவதை தவிர்த்துவிடுகின்றன. இயற்கையின் மிகயுயர்ந்த ரகஸியங்களைக் காக்க அதன் வெளிப்பாடுகளில் உள்ள ரகசிய ஒளிக்கற்றைகளாலும் சமாதிநிலையிலுள்ள யோகிகளின் புறத்தில் அமைந்த நடமாடத்தினாலும் இத்தகைய சூட்சுமங்ளை மனித மனங்களுக்கு எட்டாமல் செய்துவிடுகின்றன.
பரம்பரை வழிபாடுகளினாலும் மந்திர உச்சாடங்களினாலும் அக உடலிலிருந்து வெளியேறிவறும் சக்தி வட்டம், சிலருடைய புறஉடலில் தோய்ந்து காணப்படும். தவ ஆற்றல் கூடும் போது வெளிர்நீலம் அமைந்த சக்கரம் உடலைவிட்டு அவரவர் உடலைசுற்றி ஒளி வட்டமாய சுற்றி வருவதை யோகிகள் உணர்ந்தமையால், அவரவர் தகுதியை தவசிகள் இத்தகைய உள்ளொளியால் உணர்கின்றனர். இது ஆரா அல்ல; அதைவிட மிக அரிதான ரகசிய பெட்டகத்திலிருந்து கிளம்பியவை. சூக்கும உடலுக்கு தன்னை இயற்கையிலேயே காத்துக் கொள்ளும் வல்லமை அமைந்தேயிருக்கும். மாறாக தவ வலிமைக் கூடி வரும் காலத்தில் அது விலகி வழி விட்டு விடும். சூக்குமஉடல் தன்னை அவ்வளவு சீக்கிரத்தில் வெளிக்காட்டாமல் மனத்தின் கவனத்தை மற்றவற்றில் திசை திருப்பி கொண்டியிருக்கும்.
விலங்குகள் இத்தகைய மனித சடாவாயவை மிக எளிதாக கண்டுகொள்கின்றன. நாய் பன்றி மற்றும் சில குறிப்பிட்ட விலங்குகள் இந்த சடவாயுவை நுண்ணுர்வாலும் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புக்கொண்டிருப்பதையாலும் மிக எளிதாக கவர்ந்துக் கொள்கின்றன. நாயையும் பன்றியையும் விலக்கி வைத்திருப்பது இதுவே காரணமாய் அமைந்துவிடுகிறது.
சாத்திரங்கள் மிக ரகஸியதன்மையுடனே பேணப்பட்டு வருகின்றன. இதன் மூலத்தை தகுதியறியாதோரை தவிர்க்கவேண்டி இன்றுவரை மிக ரகஸியமாய் பாதுகாக்கப்பட்டு உரியோருக்காக காலம் காலமாய் காத்துக் கிடக்கிறது. சடாரி என்று சிலர் சொல்கின்றனர். முழுமையும் உணராமல் சொல்லப்பட்டு வரும் வெளிப்பாடுகள் அவை.
மையத்தைவிட்டு தகுதியில்லாதோரை சாஸ்திரங்கள் மிக துாரத்திற்குக் அப்பால் கொண்டு சென்றுவிடுவதால் பலர் வெறும் கொட்டைகளையும் மணியையும் உருட்டி, பாட்டுக்கள் பாடி, பஜனை செய்து, மந்திரம் ஜெபித்து, சாஸ்திரங்களுக்குள் காணாமல் போய்விடுகின்றனர். ஞானத்தை அடைய பிறவியெடுத்து வருபவர்கள் சரியான நேரக்கணங்களில் தகுதியுடைய குருவின் முன்னின்று பிறவியையும் பிறவித்தொடர்பையும் அறுத்தெடுக்கின்றனர். இவர்களே சட வாயுவை இறுக்கி மகா பிரபஞ்சத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனித மனங்ளை பிசைந்து அவரவர் தகுதிகேற்ப்ப மற்றவர்க்கு உணர்த்திவைக்கின்றனர்.
பொதுசாரம்
பல அன்பர்கள் ஆன்மிகத்தை தவறாக புரிந்துக்கொள்கின்றனர். அண்மையில் பலர் என்னிடம் தாங்கள் துறையில் இருந்து கொண்டு ஆன்மிகத்தைப் பின்பற்றி வருவதுப்போல் தங்களுக்கு கிடைக்குமா என்பதுப் போன்ற கேள்விகள் பல அன்பர்களால்  கேட்கப்படுகிறது. துன்பங்களில்லாத வாழ்க்கையேது?.
இல்லற வாழ்க்கையின் முதற்படியிலேயே எங்களுக்கு சம்மட்டியாய் அடி விழுந்தது. எங்கள் முதல் குழந்தை எதிர்பாராவகையில் கரு சிதைவில் கரைந்துப்போனது. இரண்டாவது ஆண் குழந்தை முழுவதுமாய் பிறந்து இறந்து அதன் உடலை கைப்பையில் (bigshopper) கொண்டுச்சென்று குற்றால நீரோட்டத்தில் எரித்துக் கரைத்ததை வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதது. கண்களை விட்டு மறைய இயலாத பிம்பங்கள் அது. பகைவர்க்கு கூட வரக்கூடாத கஷ்டங்களின் எல்லையில்லா துன்பியல் நிகழ்ச்சிகள் அது. இதைப்போல் எத்தனையோ வகை வகையாய் துன்பங்கள் இல்லறவாழ்வில் உருவாகி பின்னர் சிறிது சிறிதாக பெருகி பெருகி உடலை மனதை சிதைத்த பின்னரே இயற்கை உண்மையான ஆன்மிகத்திற்க்கு என்னை வழிக்காட்டியது. ஊழ்வினையின் கருணையில்லாத கண்களால் நிகழ்ந்த சம்பவங்கள் இது. அதே ஊழ்வினையே தகுதியான குருவின் முன் என்னைக் கொண்டு சென்று நிறுத்தியது. 
ஆன்மிகம் என்பது மிக கரடுமுரடான பாதையே. வெறும் தீட்சையாலும் மந்திரபிரயோகங்களினாலும் எல்லையை தொட முடியாத மிக ஆழ்ந்த வெறுமையது. அது இரக்கமின்றி பின்பற்றுவோரை கசக்கி சக்கையாய் பிழிந்து விடக்கூடிய தன்மையை மட்டும் வைத்திருக்க கூடியது.  இவையெல்லாம் கழிந்து வாழ்க்கையையும் அதன் தொடர் ஓட்டமான கர்மாவையையும் வென்று வருவதே அறிவு என்கிறார்கள் மகா ஞானிகள். வேத ஞானம் வெறும் வாசிப்புகளுக்கும் பஜனை செய்வதற்கும் கொட்டைகளை உருட்டுவதற்கு மட்டும் பயன் படுமே ஒழிய உண்மையான ஆன்மிகத்திற்கும் அதன் ஆழத்தில் மூழ்கியிருக்கும் ஞானத்திறவுக்கோலை திறப்பதற்கும் பயன்படாது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.  

Thursday, 28 June 2012

முகவுரை


சித்தியியல்

 “ஆதிசிவ சத்தியிட முதலேகாப்பு
அண்டரண்டந் தான்புகழுங் கடவுள்காப்பு
பாதிமதி சடையணிந்த முடியோன்காப்பு
பாருலகில் சித்தியுறும் பாலன்காப்பு
சோதியெனு நந்தீசர் முதலேகாப்பு
சுடரொளியாஞ் சூட்சாதி சுமுகன்காப்பு
நீதியெனும் மாதேவி நிறையோன் காப்பு
நீடாழி வுலகுபதி காப்புபாரே


சிரம் தாழ்ந்து குருமார்களை வணங்கி இந்த தமிழ் சித்தியியலின் முதற் பாகத்தை துவங்குகிறேன். மிக ஆணித்திரமாக யோக மார்க்கத்தின் சூட்சும விஷயங்களை கற்பித்ததுடன் மட்டுமின்றி பொறுமையின் எல்லைவரை கைப்பிடித்து நடத்திச்சென்று, அப்பொறுமையே ஞானத்தின் நுழைவு வாயில் என்று உணர்த்திய குருநாதர் அவர்களின் பாதங்களை வணங்குகிறேன்.

இப்பிரபஞ்சத்தில், இந்த பிறவியிலேயே என்னை நானே உணர்ந்துக் கொள்வதற்கும், என்னை சுற்றி நடப்பவைகளை அறிந்து கொள்வதற்கும், பிரம்ம வித்தை என்று சொல்லப்பட்டு வரும் யோக அப்பியாசம் மூலமாக தன்னுணர்வுடன் இந்த பிறவியிலேயே சமாதிநிலை அடையும் நிலையை பல கோடி ஆண்டுகளாய் பாதுகாத்து வரும் யோகிகள் மட்டுமே அறிந்த வித்தையை எனக்கு உணர்த்திய ஞான பிதாவை இக்கணத்தில் அவர் பாதங்களை முழுமையாக வணங்கிச்சரணடைகிறேன்.

பல ஆண்டுகளாய் தவம் இயற்றும் குருமார்கள் சொல்லி புரிய வைக்க முடியாததை நான் சொல்கிறேன் என்று சொன்னால் அது அதிகபிரசங்கிதனமாகி விடும். வேதரிஷிகள் உணர்த்திய சர்வ வல்லமை பொறுந்திய பிரபஞ்சவெளி முழுக்க நிறைந்த ஆற்றலால் பஞ்சபூதங்களுடன் இணைந்து மனித மனத்துடன் விளக்க முயற்ச்சிக்கும் போது தடைகளும் உடல் உபாதைகளும் வந்து விடுகின்றன. தவரிஷிகள் நம்முடன் கலந்து இந்த பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கி இந்த மண்ணில் விளைந்த உடம்பை பெரும் ஆற்றல்மிக்க பிரபஞ்சத்துடன் இணைத்துக் கொண்டிருப்பதால் இயற்கை ரகஸியங்களை வெளிப்படுத்த முயலும் போது இத்தகைய சூட்சும செயல்களால் ஒடுக்கவே முயற்ச்சிக்கிறார்கள்.

சிறிய அறிதலின் பயணமே தினம் தினம் தீ கனலை எழுப்பி உள்ளொளியை பெரும் தீயாக வளர்த்து அன்றாடம் நடக்கும் செயல்களையே பிரபஞ்சம் அளவிற்கு வளர்த்தெடுக்க வேண்டி வந்து விடுகிறது. தவம் இயற்ற இயற்ற உடம்பு மெல்ல இயற்கையை நோக்கி இழுக்கப்படுகிறது. பின்பு மனம் விரிக்கப்படுகிறது விரித்தெடுக்கப்பட்ட மனம் பிரபஞ்சத்துடன் இணைகிறது. சர்வ வல்லமை பொருந்திய அந்த ஆற்றல் பெருவல்லமையாகி பின்னர் பெரும் காமத்தை விளைவித்து விடுகிறது. நண்பர் அர்ச்சனாவிடம் ஒரு முறை எல்லா பெண்களுமே அழகாக தோற்றமளிக்கிறார்கள் என்று சொன்ன போது அவர் நீ வேறு எங்கோ இருக்கிறாய் என்று கிண்டல் செய்தார். இந்த பெரும் ஆற்றல்களை மனதால் அடக்கி ஆள்வதன் புற வெளிப்பாடு தான் இத்தகைய வகையான காமம் சொல்லிலும் எண்ணங்களிலும் இழையோடி வந்து விடுகிறது. யோகத்தின் ஆரம்பநிலைகளில் யோகிகளுக்குரிய மிக பெரிய தடைகல் இது.

இந்த பிறவியில் அறிந்த பெரும் ஞானத்தை ரத்தமும் சதையுமாய் உள்ள இந்த மனித உடம்பிற்குள் அறிந்த அனைத்தையும் பிரபஞ்ச அளவிற்கு கொண்டு செல்லும் போதும் மயக்கத்திற்குள் சென்று விடுகின்றன. அதை மீண்டும் மீண்டும் அணுகி சுவாசத்தையே பிரபஞ்சத்துடன் இணைத்து எல்லாம் பிரபஞ்சத்தின் அளவிற்கு விரித்தெடுக்க முயலும் போது கர்மாக்கள் கிளர்ந்தெளுந்து குடும்பசூழ்நிலைகளில் நம்மை சக்கையாக பிழிந்தெடுத்து விடுகின்றன. ஞான மரபை சரியான கோணத்தில் விளங்கிக் கொள்ள இயலாமல் தினம் தினம் மனம் அடங்கி ஒடுங்கி நிகழ்வுக்குள் கலந்து விடுகின்றன. விவரிக்க இயலாத பெரும் துன்பியல் நிகழ்வுகள் அது.

பொது சாரம்
பலர் யோக அப்பியாசத்தைப் பற்றியும் பணம் வரும் வழியையும் பற்றியுமே கேட்டு மின்னஞ்சலில் நிரப்பினார்கள். அவர்களுக்கு கீழ்க்கண்ட என் சொந்த நிகழ்ச்சியை பாடமாக வைக்கிறேன்.

மகள் பார்கவி பிறந்து இன்றுடன் ஐந்து திங்கள் ஆகிவிட்டது. கடந்த மாதம் அவளுக்கு பெயர் வைக்க வேண்டி என் மனைவி தொடர்ந்து சொல்லி சொல்வதையே நிறுத்தி விட்டார். பொருளாதார கஷ்டத்தின் காரணமாய் பேர் வைக்கும் நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே வந்தது. என் குருநாதரிடம் நாள் பார்க்க சொன்ன போது நீயே பேர் வைத்துக் கொள் என்று சொன்னார். உற்றார் உறவினர் வேலை பளு என்று காரணம் சொன்னார்கள். பெற்றோர் நீயே வைத்துக் கொள் என்றனர். நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தன.

ஒரு நாளில் அதிகாலையில் தவம் முடித்தப்பிறகு வீட்டிலேயே சர்க்கரை பொங்கல் செய்து குருநாதர் படம் முன்பு மகளை கிடத்தி என் மகளுக்கு பார்கவி என்று பெயர் வைத்தேன். என் மகளுக்கு ஞானத்தின் கதவை திறந்து அவளை வழிநடத்தும்மாறு தவம் இயற்றினேன். பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருந்த என் மகன் பகவதியை அழைத்து மகளின் பெயர் சொல்லி கூப்பிட செய்து மூவரும் சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு பெயர் வைக்கும் வைபவத்தை மிக எளிமையாய் நடத்திக்கொண்டோம்.

தவம் செய்வதால் வாழ்க்கையில் பொருளாதாரம் உயரும் என்று நினைப்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. உண்மையான தவம் இயற்றும் போது கர்மாக்கள் களைவதே நடக்கின்றன. கர்மாக்கள் களையும் போது அடையும் துன்பத்தால் யோகத்தை விட்டு ஓடி தடம் தெரியாமல் போனவர் பலர். ஞான மரபுக்கள் நாம் இல்லை என்று உணரும் போது மனித மனம் இயற்கையால் தண்டிக்கப்பட்டுவிடுகிறது. ஞானம் வெறுமே வாசிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் விவாதிப்பதற்கும் உரியவை அல்ல.

குடும்பத்தில் நான் ஒருவனே மிக குறைந்த படிப்பு படித்தவன் என்பதால் பல இடங்களில் தமிழ் நடை சரியில்லாமல் போவதும் புரிந்துக்கொள்வதற்கும் அதை பகுத்து ஆராய்ந்து அறிவதற்கும் சிரமம் இருப்பின் வாசகர்கள் தயவு கூர்ந்து பொருத்தருளுமாறு வேண்டுகிறேன்.